சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு, விநியோகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் ‘சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது’ குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்ததுடன், சம்பா (இராபி) பருவத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி தீவிரமடைந்து வருகிறது.
எனவே, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மாதாந்திர உர ஒதுக்கீட்டின்படி அனைத்து உரங்களையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முழுமையாக விநியோகம் செய்யவும், தனியார் விற்பனை நிலையங்களுக்கு எவ்வித குறைவுமின்றி வழங்கிடவும், ரயில் முனையங்களுக்கு வந்தடையும் உரங்களை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), கூட்டுறவுத்துறை அலுவலர், உர நிறுவனங்களின் பிரதிநிதி ஆகியோர் மாவட்டங்களுக்கு தேவைப்படும் உரங்களை உர ஒதுக்கீட்டின்படி உர நிறுவனங்களால் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்திட வேண்டும்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் தங்களது மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் உர இருப்பு மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தற்போது திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களின் நெல் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தட்டுப்பாடின்றி உரங்கள் உடனடியாக விநியோகம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
