சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 8,69,571 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் ஏக்கரில் சம்பா நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவு செய்யப்பட்ட பயிர்களில் 4,16,241 ஏக்கர் பயிர்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பாதி அளவு கூட காப்பீடு செய்யப்படவில்லை.
கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால், அவர்களிடமிருந்து சாகுபடி சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15ம்தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
