தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
சென்னை: தமிழ்நாட்டில் “சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது” குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 05.11.2025 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்ததுடன், சம்பா (இராபி) பருவத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப்பயிர்களின் சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. இதற்குத்தேவையான உரங்களை எவ்விதத் தட்டுப்பாடுமின்றி விவசாயிகளுக்குக் கிடைக்கச்செய்வதை உறுதிசெய்திட வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் தொடந்து நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக “சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வது” குறித்து இன்று (05.11.2025) தலைமைச் செயலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மாதாந்திர உர ஒதுக்கீட்டின்படி அனைத்து உரங்களையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முழுமையாக விநியோகம் செய்யவும் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு எவ்வித குறைவுமின்றி வழங்கிடவும், இரயில் முனையங்களுக்கு வந்தடையும் உரங்களை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), கூட்டுறவுத்துறை அலுவலர், உர நிறுவனங்களின் பிரதிநிதி ஆகியோர் மாவட்டங்களுக்குத் தேவைப்படும் உரங்களை உர ஒதுக்கீட்டின்படி உர நிறுவனங்களால் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்திடவேண்டும் என்றும், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் தங்களது மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் உர இருப்பு மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்டங்களில் சாகுபடி பரப்பு மற்றும் தேவைக்கேற்ப உரங்களை இருப்பு வைக்கவும், இருப்பு ஏதும் இல்லாத கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உடனடியாக இருப்பு வைத்திட தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நவம்பர் மாத விநியோக திட்டத்தின்படி, உர நிறுவனங்களிடமிருந்து உரங்களை கொள்முதல் செய்து அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் போதுமான இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்திட வேண்டும் என்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
தற்போது திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களின் நெல் சாகுபடி அதிகப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் உடனடியாக விநியோகம் செய்யவேண்டும் என்றும், போதுமான தொழிலாளர்களை ஈடுபடுத்தி உரங்களை உரிய இடத்திற்கு காலத்தே நகர்வு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மானிய விலையில் உரங்களை விநியோகம் செய்யும்போது எவ்வித இணை இடுபொருட்களையும் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என்று உர நிறுவனங்களுக்கும், மாவட்ட உரத்தேவைக்கேற்ப கூட்டுறவு நிறுவனங்களில் உரங்களை இருப்பு வைக்கும் பொருட்டு தேவைப்பட்டியல்களை உரநிறுவனங்களிடம் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய (TANFED) அலுவலர்களுக்கும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், த.ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., பொது மேலாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி/இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
