தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 22 லட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் குறுவை, நவரை மற்றும் கோடைக் காலங்களில் 6 முதல் 8 லட்சம் எக்டரிலும், சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் சுமார் 14 முதல் 16 லட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது. சம்பா மற்றும் தாளடியில் நீண்டகால (145 முதல் 160 நாட்கள்) மற்றும் மத்திய கால (120 முதல் 145 நாட்கள்) வயதுடைய ரகங்கள், பயிரிடும் சூழல் மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பயிரிடப்படுகிறது. பிரபல ரகங்களான சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப் ஒன், ஆடுதுறை 51 போன்ற நீண்ட கால ரகங்களும், ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 54, கோ 43, கோ 50, கோ 52, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, பிபீடி 5204, சுவர்ணா சப் ஒன், எம்டியு 7029 போன்ற மத்திய கால ரகங்களும், ஆர்என்ஆர் 15048, என்எல்ஆர் 34449, அக்சயா, அம்மன், டிகேஎம் 13 போன்ற குறைந்த வயதுடைய மத்திய கால ரகங்களும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.எனினும், மாறிவரும் பருவச்சூழல் காரணமாக, இந்தப் பருவத்தில் பயிரிடப்படும் நெல் ரகங்கள் பெருமளவில் பூச்சி, நோய்த் தாக்குதல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுகிறது. இதனால், அதிக விளைச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளில் சம்பா மற்றும் பருவங்களுக்கு ஏற்ற பல்வேறு காரணிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட சிறந்த அரவைப் பண்புகளுடைய உயர் விளைச்சல் ரகங்களை வெளியிட்டுள்ளது.
சம்பா மற்றும் தாளடி பருவங்களுக்கு ஏற்ற புதிய நெல் ரகங்களின் சிறப்பியல்புகள்பின் சம்பா, பின் தாளடி மற்றும் பிசானம் ஆகிய பருவங்களுக்கு ஏற்ற ரகங்கள் 125-130 நாட்கள் வயதுடையன. இதில், கோ-58 மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி சராசரியாக எக்டருக்கு 5,858 கிலோ, அதிகபட்ச விளைச்சல் 9048 கிலோ. நீள் சன்ன அரிசியைக் கொண்ட இந்த ரகத்தின் 1000 நெல் மணிகளின் எடை 19.4 கிராமாகும். சமைத்த சாதம் வெண்ணிறத்திலும், வாசனை கொண்டதாகவும், மிருதுவானதாகவும், நன்கு நீளும் தன்மைக் கொண்டதாகவும் உள்ளதால் பிரியாணி வகைகளுக்கு ஏற்றதாகும்.இந்த ரகம் வறட்சியைத் தாங்கும் தன்மை, இலை உறைக் கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன், வெள்ளை மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், துங்ரோ மற்றும் பழுப்புப்புள்ளி நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.மேலும், ஆடுதுறை 58 சராசரி நெல் விளைச்சல் எக்டருக்கு 6100 கிலோ கொடுக்க வல்லது. அதிக எண்ணிக்கையிலான கதிருள்ள தூர்கள், அடர்த்தியான அடித்தூருடன் சாயாத தன்மையுடையது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் ஆகும். நடுத்தர சன்ன அரிசியையுடைய ரகம். அதிக அரைவைத் திறன் (65 சதவிகிதம்). முழு அரிசி காணும் திறன் (65 சதவிகிதம்) உடையது. குலை, செம்புள்ளி, இலைஉறை அழுகல் நோய்களுக்கும், இலைமடக்குப் புழு மற்றும் தண்டுத் துளைப்பானுக்கும் மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. இது ஏடிடீ-39 (ஆடுதுறை 39) ரகத்திற்கு சிறந்த மாற்று ரகமாகும்.
டிகேஎம் 13: டபுள்யு ஜி.எல் 32100/ சுவர்ணா. சராசரி விளைச்சல் எக்டருக்கு 5938 கிலோ, அதிகபட்ச விளைச்சல் எக்டருக்கு 9050 கிலோ தரவல்லது. இலைச்சுருட்டுப் புழு, குருத்து பூச்சி மற்றும் பச்சை தத்துப்பூச்சிக்கு நடுத்தர எதிர்ப்புத்திறனும், குலைநோய், துங்ரோ நோய், செம்புள்ளி மற்றும் இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தரத் தாங்கும் திறனும் கொண்டது.மத்திய சன்ன வெள்ளை அரிசி கொண்டது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 13.8 கிராம் ஆகும். அதிக அரவைத்திறன் (75.5 சதவிகிதம்) மற்றும் அதிக முழு அரிசி காணும் திறன் (71.7 சதவிகிதம்) கொண்டது. சமைத்த சாதத்தின் நீளும் தன்மை அதிகமாகவும் (1.72), பருமன் குறைவாகவும் (1.25)இருக்கும்.கேகேஎம்1, வெள்ளைப் பொன்னியின் கதிரியக்க மாற்றம். சராசரி நெல் விளைச்சல் எக்டருக்கு 6102 கிலோ, அதிகபட்ச விளைச்சல் 8125 கிலோ. சாயாதத் தன்மை, கச்சிதமானச் செடி அமைப்பு, முற்றிலும் வெளிவந்த நெருக்கமானகதிர்கள் கொண்டது. 1000 நெல் மணிகளின் எடை 15.6 கிராம் ஆகும். மத்திய சன்ன வெள்ளை அரிசி, அதிக அரவைத்திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் கொண்டது.நடுத்தர அமைலோஸ்சும், சமைத்த அரிசி நல்ல வெண்மை நிறமாகவும், ஒட்டாமலும், சீராகவும் இருக்கும். மேலும், இதன் சாதம் மற்றும் மாவு பண்புகள் வெள்ளைப் பொன்னிக்கு இணையானது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு வேளாண் பல்கலையின் நெல் துறையை 94433-76334 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். (புதிதாக வெளியிடப்பட்டுள்ள மேலும் சில நெல் ரகங்கள் குறித்து அடுத்த இதழில் காணலாம்)

