*போலீசார் விசாரணை
சமயபுரம் : சமயபுரம் அருகே குப்பையில் கிடந்த மனித எலும்புக்கூடை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்கான புதிய சேவை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த குப்பை நிறைந்த பகுதியில் மனித எலும்பு கூடு கிடந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனித எலும்பு கூட்டை பார்வைவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் 60 வயது மதிக்கத்தக்கவராக இருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து எலும்புக்கூடாக கிடந்தவர் யார் என கண்டுபிடிப்பதற்காக போலீசார் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக திருச்சி அரசு மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாசகம் பெறுபவரா? அல்லது முன்பகை காரணமாக முதியவரை கடத்தி வந்து கொலை செய்து, உடலை இப்பகுதியில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சமயபுரம் போலீசார் சமீப காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து புகார்கள் ஏதேனும் உள்ளதா? அதில் கண்டுபிடிக்காமல் இருப்பவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், எலும்புக்கூடாக கிடந்த நபர் இறந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.