சென்னை: இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவருக்கும், இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் இன்று ரகசிய காதல் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த சமந்தா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு 2வது திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்த அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார்.
நிடிமோரு திருப்பதியை சேர்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்கா செல்ல முடிவு செய்திருந்தார். ஆனால், தனது கிரியேட்டிவ் பார்ட்னர் கிருஷ்ணா டி.கே என்பவருடன் இணைந்து, ராஜ் டி2ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவர்களின் இந்தி வெப்தொடரான ‘தி ஃபேமிலி மேன்’, அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இந்தி வெப்தொடரின் 2வது சீசனில் சமந்தா ஹீரோயினாக நடித்தார். இந்த படப்பிடிப்பில் பணியாற்றியபோது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. எனினும், தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தனர். ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். அவரது காதலை அறிந்த முதல் மனைவி ஷ்யாமலி டே சமீபத்தில் பிரச்னை செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘விரக்தி அடைந்தவர்கள் விரக்தியான செயல்களை செய்வார்கள்’ என்று மைக்கேல் புரூக்ஸின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமந்தாவின் முதல் திருமணம் கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடந்தது. அவர்கள் கடந்த 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதல் திருமணம் செய்தார். இது இருவருக்கும் 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், இன்று கோவையில் ரகசிய காதல் திருமணம் செய்துள்ள சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராஜ், டி.கே இயக்கும் புதிய இந்தி வெப்தொடரில் சமந்தா நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் தனது 2வது படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது ரகசிய திருமணத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமந்தா, ராஜ் நிடிமோரு தம்பதி விரைவில் வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

