*குறுவை சாகுபடி பணிகள் தீவிரம் தஞ்சாவூர் : தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா...
*குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்
தஞ்சாவூர் : தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா 1.96 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறுவை நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இறுதி கட்ட நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் இலக்கை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்கூட்டியே நாற்று விடப்பட்ட பகுதிகளில் நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாற்றுகள் பறிக்கும் பணி, நடவு பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் நடவு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் கூடுதலாக நெல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.