சேலத்துக்காரருக்கு எதிராக மாஜிக்கள் மீண்டும் திடீர் புரட்சி ஏற்படுத்தப்போறது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எம்எல்ஏ கனவு உலகத்தில் மிதந்த பிரதிநிதிக்கு இலைக்கட்சி தலைமை முடிவால் திடீர் கலக்கம் ஏற்பட்டிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் மாவட்டத்தில் வனத்தை சேர்ந்த இலைகட்சி சிட்டிங் பிரதிநிதி மகாபாரதத்தில் வில்லுக்கு பெயர் கொண்டவராம்.. இலை கட்சிகளின் வார்டுகள் மீது மட்டும் தனது பார்வையை திருப்பியதால் தொகுதிவாசிகளில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. வனத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள தனது பங்களாவில் இருந்தே தொகுதி பணிகளை கவனித்தாராம்..
வனத்தில் மகாபாரதத்திற்கு பெயர்போன கோயிலின் வாசலுக்கு நேராக உள்ளதால் அங்கு மீண்டும் வேண்டாம் என கைபிடித்து பார்த்தவர்கள் கூறி விட்டனராம்.. ஆனால் மாவட்ட செயலரை காக்கா பிடித்தால் மீண்டும் சீட்டு வாங்கிடலாம் என எண்ணியவருக்கு, எதிர்க்கட்சியில சீட்டு கூட்டணிக்கு செல்லலாம் என தகவல் கசியவே உற்சாகத்தில் மிதந்தாராம்.. ஆனால், இலை தலைமையோ ஸ்டார் வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்தும் முடிவில் இருப்பதாக நிர்வாகிகளிடம் அரசல் புரசலாக பேச்சுகள் அடிபட இரண்டாவது முறை எம்எல்ஏ கனவில் மிதந்தவருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாம்..
இதுபற்றிதான் புரம் முழுக்க பரவலாக பேச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவருக்கு எதிராக புரட்சி வெடிக்க போகுதாமே எப்படி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் என அடிச்சி சொல்லும் இலைக்கட்சி தலைவருக்கு எதிராக திடீர் புரட்சி ஏற்படுத்த மாஜி மந்திரிகள் திட்டமிட்டிருக்காங்களாம்.. தேர்தலில் மாபெரும் கூட்டணியை அமைப்பேன்.. யாரும் கவலைப்பட வேண்டாம் என சொல்லிக்கிட்டே இருக்காராம் இலைக்கட்சி தலைவர்.. சிவப்பு கம்பளம் விரிச்சி வச்சிருக்கோம்..
பிள்ளையார் சுழி போட்டாச்சின்னு கூவி கூவி அழைத்துப் பார்த்தாராம்.. ஆனால் யாரும் திரும்பி கூட பார்க்கலையாம்.. தனது தொண்டர்களை உசுப்பேத்துவதை தெரிந்துக்கிட்ட நடிகர், நான்தான் முதல்வர் வேட்பாளருன்னு அதிரடியா சொல்லிட்டாராம்.. இதனால் போவதற்கு இடமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாராம் இலைகட்சி தலைவர். அதே நேரத்தில் மன்னார்குடி கும்பலை உள்ளே விட்டால் முதலுக்கே மோசமாகிவிடும், பழையபடியே குக்கர்காரரிடம் கைகட்டி வாய்பொத்தி தான் நிக்கணும் என்பதால் தான் அவர்களை கட்சிக்குள்ளாற சேர்க்கவே மறுக்கிறாராம் இலைக்கட்சிக்காரர்...
முதல்வராக வேறு இருந்துவிட்டோம். எதிர்கட்சி தலைவர் பதவியும் சுகமாகத்தான் இருக்குது.. இதைவிட்டுவிட்டு கைகட்டி சேவகம் செய்ய இனிமேல் முடியாதுன்னு உறுதியா இருக்காராம்.. ஆனால் சிவப்பு ஒளிவிளக்கு சத்தம்போடும் காரில் போகணுமுன்னு ஆசையோடு இருக்கும் மாஜி மந்திரிகள் ரொம்பவும் கவலையா இருக்காங்களாம்.. இவர் மட்டும் சொகுசா இருக்கணும்.. எங்களுக்கு அந்த ஆசை கிடையாதான்னு ஏக்கமாக கேட்குறாங்களாம்.. இவரின் நடவடிக்கையால் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு குறைஞ்சு போச்சி..
இலைக்கட்சியுடன் மலராத தாமரையும், தனிநபரான வாசனை உள்ளவரும் மட்டுமே இருக்காங்க.. நடிகர் தனிக்கடையை தொடங்கிட்டாரு.. மாம்பழம் ரெண்டாகி கிடக்கு.. உடைந்து கிடைக்கும் இலைக்கட்சியை ஒன்றாக்க கூட முடியல.. இவரை நம்பினால் மண்குதிரை மீதேறி சவாரி போன கதைதான்.. இனிமேலும் குரல் கொடுக்கலைன்னா கட்சி கரைந்துபோவது உறுதி என்ற நிலைக்கு வந்துள்ள மாஜிக்கள், திடீர் புரட்சியை ஏற்படுத்தப்போறாங்களாம்.. கடந்த முறை 6 பேர் போய் பேசினாங்களாம்... இம்முறை இருந்த இடத்தில் இருந்தே குரலை உயர்த்தப்போவதாக சொல்றாங்க..
இதை ரகசியமாக தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர் செய்வதறியாது திகைத்துப்போயிருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியில் பதவி பறிபோன, பதவி கிடைக்காத பலர் முகாம் மாற தயாராகி விட்டாங்களாமே எங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்டத்து மலராத கட்சியில கோஷ்டி மோதல் முன் எப்போதையும் விட உச்சத்துக்கு சென்றிருக்கிறதாம்.. மாவட்டம் முழுவதும் கட்சி பதவிகளை மாஜி காக்கிச் சட்டைக்காரரின் ஆதரவாளர்கள்தான் ஆக்கிரமித்து இருந்தனராம்..
நீண்ட கால கட்சியினர், மாஜி நிர்வாகிகள் என பலரும் ஓரங்கட்டப்பட்டு இருந்தாங்க.. பெயர் தெரியாத பலர் மாஜி காக்கி பெயரை சொல்லி காலம் கடத்தி வந்துள்ளனராம்.. மாஜி காக்கி மாநில தலைவர் பதவியிழந்து, நெல்லைக்காரர் புதிதாக பதவிக்கு வந்ததும், தற்போது கட்சி நிர்வாகிகள் மாற்றம் தீவரமாக நடந்து வருது.. மாஜி காக்கி சட்டையின் ஆதரவாளர்கள் பலர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, புதிது புதிதாக பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருதாம்.. இதனால், மெடல் மாவட்ட மலராத கட்சியில் நாளுக்குநாள் கோஷ்டி பூசல் அதிகரித்து கொண்டே போகிறதாம்..
பதவி பறிபோன, பதவி கிடைக்காத இன்னும் பலர் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் முகாம் மாறலாமா எனவும் யோசிக்க தொடங்கி விட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சருக்கு கல்தா கொடுக்க சேலத்துக்காரர் ரெடியாகி விட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை மத்திய மண்டலத்தில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்க தலைமை சீனியர் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாம்.. கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர் மணியானவரின் செயல்பாடு சரியில்லை என மற்றொரு மாஜி அமைச்சர் கூறி வருகிறாராம்..
அதற்கான ஆதாரத்தையும் மாஜி அமைச்சர் எடுத்து வைத்து இருக்காராம்.. கட்சியின் முக்கிய முடிவுகள், அறிவிப்புகளை சேலத்துக்காரர் அவ்வப்போது கூறி வருகிறாராம்.. ஆனால் அதையும் மீறி சில விஷயங்களை மணியானவர் தன்னிச்சையாக செய்து வருவது சேலத்துக்காரருக்கு தெரிய வந்திருக்கு.. உடனே அவர் மீது நடவடிக்கை எடுத்தால், கட்சிக்குள்ளே சலசலப்பு வந்து விடும்.. புது ஆண்டுக்குள் அவருக்கு கல்தா அல்லது டம்மியாக்க சேலத்துக்காரர் முடிவு செய்திருப்பதாக கட்சிக்குள்ள அரசல் புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
