தூத்துக்குடி: உலகின் முன்னணி மின்சார வாகனத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வியட்நாம் நாட்டைச்சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து உள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் தொழிற்சாலையை கடந்த மாதம் 4ம் தேதி தூத்துக்குடி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மூலம் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய இரு மாடல்களில் பேட்டரி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த கார்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த கார்களின் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள இந்த நிறுவனத்தின் தயாரிப்பான விஎப் 6 மாடல் கார் ரூ.16.49 லட்சம் எனவும், விஎப் 7 மாடல் வகை கார் விலை ரூ.20.89 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கார்களை தொடர்ந்து எஸ்யூவி எனப்படும் ஸ்ேபார்ட்ஸ் யுட்டலிட்டி வெகிக்கிள் என்ற பெரிய வகை பேட்டரி கார்களையும் அடுத்த இரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர வின்பாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.