சேலம் மேம்பாலத்தில் நடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்; மாணவிக்கு அனுப்பிய ஆபாச படங்களை அழிக்க செல்போனை பறித்து உடைத்த வாலிபர்கள்: வழிப்பறி நடக்கவில்லை என போலீஸ் கமிஷனர் பேட்டி
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில், நேற்று காலை 7 மணிக்கு வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரை பைக்கில் வந்த 3 வாலிபர்கள், வழிமறித்து தாக்கி, செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அவ்வழியே வந்தவர்கள், செல்போனை பறிகொடுத்தவரிடம் விசாரித்தனர். அதில் அவர், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (30) எனத் தெரியவந்தது. அவர், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, செல்போன் பறித்தது பற்றி புகார் கொடுத்தார். இதனிடையே, மேம்பாலத்தில் சுரேசை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு, 3 வாலிபர்கள் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வழிப்பறி குறித்து விசாரித்து, அந்த 3 வாலிபர்களையும் பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தனிப்படைகளை அமைத்தார். அதன் பேரில், மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, 3 பேரையும் தீவிரமாக தேடினர். அம்மாப்பேட்டை போலீசார், அந்த 3 வாலிபர்களும் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். அங்கு சென்று மதியம் 12 மணிக்கு, 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், பிஏ, பிபிஏ, டிப்ளமோ படித்து வரும் கல்லூரி மாணவர்கள் எனத்தெரியவந்தது. தீவிர விசாரணையில், புகார் கொடுத்த சுரேஷ் என்பவர், இந்த கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பழக்கமான புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியிடம், ஆன்லைனில் மிக தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவி கூறியதன் அடிப்படையில், சுரேசை வரவழைத்து தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்தது தெரியவந்தது.
இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மேம்பாலத்தில் செல்போன் பறிக்கப்பட்ட வழக்கில், புகார் கொடுத்த நபரின் உண்மையான பெயர் பிரம்மநாயகம் (30). திருநெல்வேலியை சேர்ந்த அவர், சென்னையில் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். ஆன்லைனில் தனது பெயரை சுரேஷ் என போலியாக வைத்துக்கொண்டு, குரூப் வீடியோ கேம் விளையாடி வந்த ஒரு பள்ளி மாணவியிடம் பேசியுள்ளார். பிறகு அந்த மாணவிக்கு, மிகவும் மோசமாக படம், வீடியோக்களை அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார். இதனை அந்த மாணவி, அதே வீடியோ கேமில், நண்பர்களாக பழகிய சேலத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரிடம் தெரிவித்துள்ளார். அந்த மாணவர், பிரம்மநாயகத்திற்கு போன் செய்து, இது போல் செய்யாதே என கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், சேலத்தை சேர்ந்த மாணவர், பெண் பெயரில் ஒரு போலி ஐடியை உருவாக்கி, பிரம்மநாயகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை சேலத்திற்கு வரழைத்து, மேம்பாலத்தில் வைத்து, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, செல்போனை பறித்துக் அதிலிருக்கும் படங்களை அழிக்க உடைத்து வீசியுள்ளனர்.மேலும், சிறுமியை தொந்தரவு செய்யாமல், இருப்பதை உறுதிபடுத்தவும், அந்த போனில் உள்ள தகாத செய்திகள், படங்களை நீக்கவும் இத்தகைய செயலில் 3 மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களும் அப்பாவிகள். எனவே, அவர்கள் மீது கைது, சிறையில் அடைக்கும் நடவடிக்கை இருக்காது. அதேநேரத்தில் செல்போன் பறித்த புகாரை கொடுத்த பிரம்மநாயகம், தற்போது இங்கு இல்லை. அவர் புகார் கொடுத்ததும் புறப்பட்டுச் சென்று விட்டார். அவர், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆதாரங்கள் சிக்கியிருக்கிறது. அதனால், அவர் மீது போக்சோ, சைபர் குற்றம் உள்ளிட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
