திண்டுக்கல்: தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் நேற்று சேலத்தில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்கிற அப்பு தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து அதற்கு நிபந்தனை ஜாமின் பெற்று சேலம் மாநகர் எல்லைக்குட்பட்ட அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதியிலிருந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தன் மனைவியோடு காலை உணவு சாப்பிடவந்த மதனை திடீரென உணவகத்தின் உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அஸ்தம்பட்டி காவல்துறையினர் தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.