Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் பாமக மாவட்ட செயலாளரை கொல்ல முயற்சி அன்புமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் புகார்

சேலம்: அன்புமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்தார். சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாநில இணை பொதுச்செயலாளருமான அருள், நேற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம்கோயலிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) வாழப்பாடியில் ஒரு கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர், அன்புமணி பற்றி பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தவறாக செய்தி போடுகிறாயா எனக் கூறி, கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் குத்த வந்தனர். அது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் உள்ளன.  இதேபோல், ராமதாசுடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய பொறுப்பாளர்களை சிலர் மிரட்டி வருகின்றனர்.

மிரட்டலுக்கு பயந்து நாங்கள் புகார் கொடுக்க வரவில்லை. காவல்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இப்படியே தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருந்தால், நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டி இருக்கும். அன்புமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. போனில் மிரட்டுகின்றனர். எனக்கு பயம் இல்லை. இன்றும் நான் தனியாக தான் செல்கிறேன்.

சேலத்தில் அக்டோபர் 5ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று பேசுகிறார். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியிலும் கிராமக்கூட்டம் நடக்கிறது. ராமதாஸ் தான் பாமக என்று மிக விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு கொடுக்கவில்லை. மே 28ம் தேதியோடு அன்புமணி தலைவர் பதவி முடிவுற்றது.

30ம் தேதி முதல் பாமக தலைவராக ராமதாஸ் உள்ளார். பாமக தலைவராக இருக்கும் ராமதாஸ் தான் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்து போட்டு வருகிறார். முகவரி மாறி அன்புமணிக்கு தேர்தல் ஆணைய கடிதம் சென்றது பற்றி, ஆணையரிடம் முறையிட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இதுசம்மந்தமாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அருள் எம்எல்ஏ கூறினார்.