Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சேலத்தை தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்: பாஜ நிர்வாகி தொடங்கியதால் நயினார் அதிர்ச்சி

நெல்லை: சேலத்தை தொடர்ந்து, தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜ நிர்வாகி ஒருவர் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ தொடங்கியிருப்பது நயினாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் களத்தில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு தனி ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகும், அண்ணாமலைக்கான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில், அவரது தீவிர ஆதரவாளரும் சேலம் மேற்கு மாவட்ட கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவருமான தங்கமணி, அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார்.

இந்த மன்றத்தை கடந்த 22ம் தேதி சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தொடங்கி வைத்தார். பாஜவில் தனி நபர்களின் பெயரில் எந்த மன்றமும் வைப்பதில்லை. ஏன் மோடிக்கே கூட மன்றங்கள் கிடையாது. அப்படி இருக்கும்போது அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளதும், அதை ஒரு மாவட்ட தலைவரே தொடங்கி வைத்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது. சொந்த மாவட்டத்திலேயே அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதால் நயினார் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதை தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலை பெயரில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், உத்தமபாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜ நிர்வாகி வேல்கண்ணன் என்பவரால் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் புதிதாக ஒரு அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதுதொடர்பான விளம்பர பதாகைகள் சமூக வலைதளங்களில் பரவி, நெல்லை பாஜவில் புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்த மன்றம் முற்றிலும் ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அதன் நிறுவனர் வேல்கண்ணன் தெரிவித்தாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தின் நிறுவனர் வேல்கண்ணனிடம் கேட்ட போது, ‘அண்ணாமலை மீது, எங்களுக்கு உள்ள ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு தான் நற்பணி மன்றம் தொடங்க காரணம். நாங்கள் ஏற்கனவே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம். முழுக்க முழுக்க சமூக சேவை செய்வது மட்டும்தான் நற்பணி மன்றத்தின் நோக்கம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த மன்றத்தை தொடங்கியுள்ளோம். நாங்களே சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்தோம். மன்றம் தொடங்கப்படும் என்ற செய்தி தெரிந்ததும், பலரும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, தங்களையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் முழுவதும் இந்த மன்றத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

அண்ணாமலையுடன் இருப்பவர்களிடம் பேசியிருக்கிறோம். அவரது கவனத்திற்கும் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். நிச்சயமாக அவருடைய ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

அவர் ‘அரசியல் வேறு, சேவை வேறு’ என்று கூறினாலும், தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரில் ஒரு மன்றம் தொடங்கப்பட்டிருப்பது, பாஜவில் நிலவும் உட்கட்சிப்பூசலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நயினார் - அண்ணாமலை இடையே கருத்து மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்வு வரும் காலங்களில் பாஜவில் புதிய அதிகார மையத்தை உருவாக்கலாம் என்று அக்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றநனர்.