சேலம் அருகே மர்மநபர்கள் வெறிச்செயல் கட்டையால் அடித்து மூதாட்டி படுகொலை: காதோடு கம்மலை அறுத்துச் சென்ற கொடூரம்
இளம்பிள்ளை: சேலம் அருகே மூதாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்து, காதோடு கம்மல் மற்றும் மூக்குத்தியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலத்தை அடுத்த கொண்டலாம்பட்டி வேம்படிதாளம் இந்திராநகர் ரயில்வே குடியிருப்பில் வசித்தவர் மாரியம்மாள் (85). இவருக்கு தனபால் (56) என்ற மகன் உள்ளார். கடந்த 40 ஆண்டுக்கு முன் ரயில்வேத்துறையில் ஊழியராக வேலை பார்த்த தங்கவேல் இறந்து விட்ட நிலையில், வாரிசு அடிப்படையில் தனபாலுக்கு கீமேன் வேலை கிடைத்துள்ளது.
இதனால், அந்த ரயில்வே குடியிருப்பிலேயே தனபால், மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். அதே வீட்டில் தாய் மாரியம்மாளும் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளிபுறத்தில் மாரியம்மாள் படுத்து தூங்கினார். இரவு பணிக்கு சென்றிருந்த மகன் தனபால், நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மாரியம்மாள் தலையில் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது காது அறுக்கப்பட்டு, அதிலிருந்த தோடு மற்றும் மூக்குத்தி என முக்கால் பவுன் நகையும், காலில் அணிந்திருந்த 200 கிராம் வெள்ளி காப்பும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில் தனபால் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வந்து விசாரித்தனர். அதில், ரயில்வே குடியிருப்பில் ஒதுக்குப்புறமான வீடு என்பதால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்துள்ளது.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மூதாட்டி மாரியம்மாளை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்து, அவரது காதில் கிடந்த தோடை கழற்ற முடியாமல், காதோடு அறுத்தும், மூக்குத்தியை கழற்றியும் எடுத்துள்ளனர். ஒரு காதில் இருந்து ேதாடை அறுத்து எடுத்ததில், திருகாணி மட்டும் கீழே விழுந்து கிடந்தது. நகை பறிக்கும் நோக்கில் வந்து, இக்கொலையை மர்மநபர்கள் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மூதாட்டி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற நாய், மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. இக்கொலை, கொள்ளையில் 2 பேர் ஈடுட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.