சேலத்தில் பணம் இரட்டிப்பு தருவதாக ரூ.500 கோடி மோசடி திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த ரூ.12.65 கோடி, 2.5 கிலோ தங்கம் பறிமுதல்
* விடிய விடிய பணத்தை எண்ணிய வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள்
சேலம்: சேலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கோடி கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில், திருமண மண்டபத்தில் போலீசார் நடத்திய சோதனையில் குவித்து வைத்திருந்த ரூ.12.65 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, அரிசி, மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையை வேலூரை சேர்ந்த விஜயபானு (48) நடத்தி வருகிறார். இவர், சேலம் அம்மாபேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களிடம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி முதலீடு பெற்றுள்ளார். ஆரம்பத்தில் சிறிய அளவில் முதலீடு பெற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் பணம் இரட்டிப்பாக கிடைக்கிறது என்பதற்காக லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனால், அந்த திருமண மண்டபத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து வந்தது.
இதனை அறிந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி உள்ளிட்ட போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதில், மக்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை முதலீடாக பெற்றால், 9 மாதத்திற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் கோடி கணக்கில் பணத்தை முதலீடு பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும், தொடர்ந்து அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி பணத்தை கொட்டி கொடுப்பது தெரிந்தது. அங்கீகாரம் இல்லாத திட்டத்தை கூறி மோசடியாக மக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி உள்ளிட்ட போலீசார், அதிரடியாக மண்டபத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த விஜயபானு மற்றும் ஊழியர்கள் போலீசாரை தாக்கினர். இதனால், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிற்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மண்டபம் முன்பு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து திருமண மண்டபத்தை போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அறக்கட்டளையை நடத்தி மோசடியில் ஈடுபட்ட விஜயபானு (48), நிர்வாகிகளாக இருந்த வேலூரை சேர்ந்த ஜெயபிரதா (47), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கர் (49) ஆகிய 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சேலம் கோர்ட்டில் அனுமதி பெற்று, மண்டபத்தில் வசூலித்து வைத்திருந்த பணத்தை எண்ணும் பணியை துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா, தாசில்தார் தாமோதரன் முன்னிலையில் போலீசாரை கொண்டு நடத்தினர்.
விடிய விடிய பணம், தங்கம், வெள்ளி, மளிகை பொருட்களை கணக்கிட்டனர். இதில், பணத்தை வசூலித்து வைத்திருந்த மேசைகள் மட்டுமின்றி, ஆங்காங்கே தொட்டிகளில் பணத்தை குப்பை போல் குவியலாக கொட்டி வைத்திருந்தனர். கழிவறையில் உள்ள பெட்டிகளில் கூட பணக்கட்டுகள் இருந்தன. அவை அனைத்தையும் ஒன்று திரட்டி விடிய விடிய 6 மிஷின்களை வைத்து பணத்தை எண்ணினர்.
முதலில் ரூ.2 கோடி அளவிற்கு பணம் இருக்கும் எனக்கருதிய நிலையில், எடுக்க எடுக்க பணக்கட்டுகள் வந்துகொண்டே இருந்தது.
நேற்று காலையில் தான், பணத்தை முழுமையாக எண்ணி முடித்தனர். அதில், ரூ.12.65 கோடி ரொக்க பணமும், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 1000 மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்கள், சேலை, ேபண்ட், சர்ட் உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் இருந்தன. அவை அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக 2.5 கிலோ தங்கத்தையும், அதன் ஒரிஜினல் தன்மையை அறிய வங்கியில் இருந்து நகை மதிப்பீட்டாளர்களை அழைத்து வந்து உறுதி செய்துகொண்டனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சித்ராதேவி புகாரின் பேரில், அங்கீகாரம் இல்லாத திட்டத்தில் முறைகேடாக மக்களிடம் ஆசைவார்த்தை கூறி பண முதலீடு மோசடியில் ஈடுபட்டதாக விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் 15 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதுவரையில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என்றும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கைதான விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நேற்று கோவைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இம்மோசடி சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* கைதான விஜயபானு வீட்டில் அரை கிலோ தங்கம் சிக்கியது
கைதான விஜயபானு, அம்மாபேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவருடன் அறக்கட்டளையின் பொறுப்பில் உள்ள ஜெயபிரதாவும் தங்கியிருந்துள்ளார். டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார், விஜயபானுவின் வீட்டில் நேற்று சோதனையிட்டனர். அப்போது வீட்டில் அரை கிலோ அளவிற்கு தங்க நகை இருந்துள்ளது.
அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தமாக பறிமுதலான 2.5 கிலோ தங்கத்தில் அதுவும் அடக்கம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த 2.5 கிலோ தங்கத்தில் நெக்லஸ், ஆரம், வளையல் உள்ளிட்ட நகைகளாக இருந்துள்ளது. இவை அனைத்தும் விஜயபானு, ஜெயபிரதா ஆகியோர் அணிந்துகொள்ள மோசடியாக பெறப்பட்ட முதலீட்டு பணத்தில் இருந்து வாங்கியவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* போலீசாரை தாக்கிய 12 பேர் கைது
திருமண மண்டபத்தில் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையிட்டபோது, அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், போலீசாரை தாக்கி, இங்கு மோசடி ஏதும் நடக்கவில்லை எனக்கூறி விரட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீசில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு ஏட்டு கலைச்செல்வி புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய 8 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கைதான 12 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.
* முதலீடு செய்தவர்கள் தவிப்பு
விஜயபானு நடத்திய அறக்கட்டளையில் சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, மரவனேரி, அஸ்தம்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு லட்சமும், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையிலும் பணத்தை விஜயபானுவிடம் கொடுத்துள்ளனர். பண முதலீட்டிற்கு ஏற்ப அவர்களுக்கு தங்கம், வெள்ளியில் பரிசு பொருட்களை கொடுத்துள்ளனர். பண முதலீடு செய்த ஆயிரக்கணக்கான மக்கள், தற்போது என்னசெய்வதென்று தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.
* மண்டபத்திற்கு சீல் வைப்பு
அறக்கட்டளை செயல்பட்டு வந்த சிவகாமி திருமண மண்டபத்தில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை நிறைவு செய்ததும், அங்கிருந்து பணம், தங்கம், வெள்ளி, கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து எடுத்துக்கொண்டனர். அதுபோக அந்த மண்டபத்தில் 1000 மூட்டை அரிசி மூட்டைகள், 1000 மூட்டைக்கு மேல் மளிகை பொருட்கள், துணிகள் இருப்பதால், அவை அனைத்தையும் அங்கேயே வைத்து, மண்டபத்தை பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
* ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியவர்
கைது செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு, இதற்கு முன்பு இதேபோல் வேலூர் மாவட்டம் காட்பாடியில் அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தி, மக்களிடம் இருந்து பண முதலீடு பெற்றுள்ளார். அங்கு முதலீடு பெற்ற பணத்தை திரும்ப கொடுக்காத புகாரின்பேரில், வேலூர் மாவட்ட போலீசார் விஜயபானுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர், சேலத்திற்கு வந்து மீண்டும் அறக்கட்டளை, பண முதலீடு மோசடியில் ஈடுபட்டு, தற்போது கைதாகியுள்ளார்.
* 7 மணி நேரம் மிஷினில் எண்ணிய போலீஸ்
திருமண மண்டபத்திற்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டறிந்ததும், அந்த பணத்தை எண்ணி கணக்கில் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். இதற்காக வெளியில் இருந்து 6 பணம் எண்ணும் மிஷின்களை கொண்டு வந்து, துணை கமிஷனர்கள், தாசில்தார் முன்னிலையில் 6 போலீசார் எண்ணினர். அவர்களுக்கு உதவியாக 15 போலீசார், பணக்கட்டுகளை கொண்டு வந்து அடுக்கி கொடுத்தனர்.
ஆங்காங்கே குப்பை போல் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார் மலைத்து போயினர். இரவு 11 மணிக்கு பணத்தை எண்ண ஆரம்பித்த 6 போலீஸ்காரர்களும் இடைவிடாது 7 மணி நேரம் எண்ணி, காலை 6 மணிக்குதான் முடித்தனர். 500 ரூபாய் கட்டுகளாக ரூ.12 கோடியும், 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளாக ரூ.65 லட்சமும் இருந்தது.