சென்னை, சேலம், குமரியில் ‘நோ ரெஸ்பான்ஸ்’ எடப்பாடிக்கு வேலை செய்ய மறுக்கும் அதிமுக நிர்வாகிகள்: அதிருப்தியில் தலைமை
சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க இருக்கிறது. இதையடுத்து தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அதிமுக-பாஜ கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டார். பூத் கமிட்டி நியமனம் போன்ற அடிப்படை வேலைகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதற்காக மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சுமார் 85க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகரில் பணிகள் நடைபெறாமல் இருப்பது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பூத் கிளைகளை அமைப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அப்பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் அவர்களின் மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் பூத் கிளைகள் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகர், சென்னை புறநகர் ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளராக மொரப்பூர் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஓராண்டாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாசலம் அதிரடியாக நீக்கப்பட்டார்.
புதிய மாவடட செயலாளராக பாலு நியமிக்கப்பட்டதுடன் 120 புதிய வட்ட செயலாளர்களையும் நியமித்தார். இவரது அதிரடி நடவடிக்கை காரணமாக மூத்த நிர்வாகிகள் கட்சி பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது முயற்சிக்கு யாரும் துணையாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே எல்லா மாவட்டங்களில் பணிகள் முடிவடைந்த நிலையில் எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பது அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் மாவட்டத்தில் பொறுப்பாளராக சிங்காரம் பணியாற்றி வரும் நிலையில் அங்கிருக்கும் நிர்வாகிகளும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதன் காரணமாகவே பணிகள் முடிவடையாத நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த மாவட்டத்திலேயே நிர்வாகிகள் பணியாற்றாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து எச்சரிக்கை செய்யவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகரத்தில் நிர்வாகிகளை அரவணைத்து செல்லவில்லை. இதன் காரணமாகவே பணிகள் மிகவும் தொய்வாகி இருக்கிறது’’ என்றனர்.