சேலம்: சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழுஉருவ வெண்கல சிலை 16 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கலைஞர் சிலையின் வலது பகுதியில் கருப்பு பெயின்ட் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், சிலைக்கான 4 அடி பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து கட்சியினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து போலீசாரும், திமுகவினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடய அறிவியல் துறையினரும், அங்கு வந்து சிலை பகுதியில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை வயதான ஒருநபர் கையில் பெயின்ட் டப்பாவுடன் செல்வதும், கலைஞர் சிலை அருகில் உள்ள மின்சார இணைப்பை துண்டிப்பதும் பதிவாகியுள்ளது.
மின் இணைப்பை துண்டித்த அந்த நபர், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியை கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கலைஞரின் சிலை மீது பூசியுள்ளார். பின்னர், சிலையின் கீழே உள்ள பீடத்திலும், பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றுள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.