Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மலை அடிவாரத்தில் சுற்றிவளைப்பு 2 மூதாட்டிகளை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: எஸ்.ஐ.யை வெட்டி விட்டு தப்பியபோது போலீஸ் அதிரடி

இளம்பிள்ளை: சேலம் அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி, சங்ககிரி அருகே எஸ்ஐயை ெவட்டி விட்டு தப்பியபோது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார். குண்டுகாயமடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை தூதனூர் இ.காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாவாயி (70). பெருமாயி (எ) பெரியம்மாள் (75). இவர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி காலை தூதனூர் காட்டுவளவில் உள்ள கல்குவாரி குட்டையில் சடலமாக மிதந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த தலா ஒரு பவுன் தங்க தோடு, வெள்ளி கால் காப்புகளை காணவில்லை. நகைக்காக அவர்களை கொலை செய்து, கல்குவாரி குட்டையில் தூக்கி வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டனர். பிரேதப்பரிசோதனையில் மூதாட்டிகள், கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது. சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்படி 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிழக்கத்திக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யனார் (55) என்பவர், அப்பகுதியில் பாவாயி குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கே குடிசை போட்டு தங்கி விவசாய வேலை செய்ததும், மூதாட்டிகள் மாயமான நாளில் இருந்து அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவானதும் தெரிய வந்தது.

அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை, சங்ககிரி அருகே ஒருக்காமலை அடிவாரம் பகுதியில் ரவுடி அய்யனார் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றுஅய்யனாரை சுற்றிவளைத்தனர். அப்போது அவர் திடீரென கத்தியால் எஸ்ஐ கண்ணனின் வலது தோள்பட்டை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரையும் தாக்க முயன்றார். அதனால் வேறு வழியின்றி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அய்யனாரின் காலில் துப்பாக்கியால் சுட்டார்.

அதில், வலது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் குண்டு காயமடைந்த அய்யனார் மற்றும் வெட்டுக்காயமடைந்த எஸ்ஐ கண்ணன் ஆகியோருக்கு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அய்யனாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து மாவட்ட எஸ்பி (பொ) விமலா, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ கண்ணனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

* 2 மூதாட்டிகளை கொன்றது ஏன்?

போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட அய்யனாரிடம் நடத்திய விசாரணையில், தான் குத்தகைக்கு ஓட்டும் விவசாய நிலத்தில் வேலை பார்த்த மூதாட்டி பாவாயி, கூலி கேட்டு வந்தார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தேன். சம்பவத்தன்று கூலியை கேட்டு தொந்தரவு செய்ததால், அவரது கழுத்தை நெரித்து கொன்றேன். அதனை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மற்றொரு மூதாட்டி பெருமாயி பார்த்துவிட்டார். அவர், ஊராரிடம் தெரிவித்து அழைத்து வருவதாக கூறியதால், அவரை விரட்டி பிடித்து அவரது கழுத்தையும் நெரித்து கொன்று, பிறகு 2 பேரின் காதில் கிடந்த தங்க தோடுகள், காலில் கிடந்த வெள்ளி காப்புகளை கழற்றிவிட்டு, கல்குவாரி குட்டையில் தூக்கி வீசியதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

* மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொல்வது வாடிக்கை

ரவுடி அய்யனார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. 2 கொலை வழக்குகள், இதேபோன்று மூதாட்டிகளை கொன்று நகை பறித்ததாகும். மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்து கொலை செய்வதை வாடிக்கையாக கொண்ட அய்யனாருக்கு 2004ல் ஒருகொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 13 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த அவர், நன்னடத்தை காரணமாக கடந்த 21.9.2018ல் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். பின்னர் தூதனூர் இ.காட்டூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் விவசாயம் செய்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த 7 ஆண்டுக்கு பின் மீண்டும் 2 மூதாட்டிகளை கொன்று தற்போது சிக்கிக்கொண்டுள்ளார்.

* மேலும் 2 கொலையில் தொடர்பு?

சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்டார். அதேபோல், காரிப்பட்டி பகுதியில் 25 நாட்களுக்கு முன் ஒரு மூதாட்டியை கொன்று நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கொலை வழக்கிலும் அய்யனாருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.

* உடலை கல்குவாரியில் போட உதவியவர் கைது

கொலையான பெருமாயி உடலை தூக்கி கல்குவாரி குட்டையில் போட ரவுடி அய்யனாரின் கூட்டாளியான தூதனூரை சேர்ந்த பூபதி (53) என்பவர் உதவியது தெரியவந்தது. அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.