*விவசாயிகள் கண்ணீர்
ராசிபுரம் : சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வழிநெடுகிலும் உள்ள நீரோடைகள் மூடப்பட்டு வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையானது கடந்த 4 ஆண்டுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் பகுதியில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். சேலம்- நாமக்கல் சாலையின் இருபுறமும் பல்வேறு கிராமங்களும், நகரங்களும் உள்ளன.
கிராமப் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், சாலையை ஒட்டி சர்வீஸ் ரோடு போடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக சாலையோரம் இருந்த ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை அடியோடு வெட்டி அகற்றி விட்டனர்.
இந்நிலையில், வழிநெடுகிலும் உள்ள நீரோடைகளையும் அழித்து வருகின்றனர். ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் தேங்கி அங்கிருந்து நீரோடை வழியாக மூனுசாவடி பகுதியில் சாலையை கடந்து புதுச்சத்திரம் ஏரியை வந்தடைகிறது.
தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்த நீரோடைகளை மண் கொட்டி அழித்து வருகின்றனர். மழைநீர் சாலையை தாண்டி செல்ல எவ்வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. மழை பொழிவு அதிகரித்தால், அணைப்பாளையம் ஏரிக்கான நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, உபரிநீர் பெருக்கெடுது வெளியேறும். அந்த தண்ணீர் சாலையில் தான் செல்லும். அதேபோல், புதுச்சத்திரம் ஏரிக்கான நீர்வழிப்பாதையும் அடைக்கப்படுவதால் அங்குள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நகரமயமாக்கல் திட்டங்களால் கிராமங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம்- நாமக்கல் சாலையில் வழிநெடுகிலும் சிறு கிராமங்கள், மலை குன்றுகள், கால்வாய்கள் நிறைந்திருந்தது.
தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால் பல்வேறு கிராமங்கள் காணாமல் போய் விட்டன. அங்கிருந்த மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். பொய்மான் கரடு உள்ளிட்ட பிரசித்தி பெற்ற மலை கரடுகள் மாயமாகி விட்டன. குறிப்பாக சிற்றோடைகள், மழை நீர் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.
இதனால், விவசாயம் பொய்த்து வருகிறது. முழுக்க முழுக்க மழையை எதிர்பார்த்தே விவசாயம் செய்யும் கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். முப்போகம் விளைந்த பகுதியில் ஒரு போக சாகுபடிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல சாலைகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தாலும், நகரமயமாக்கல் காரணமாக விளை பொருட்களையே உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், சாலை சீரமைப்பு மற்றும் சர்வீஸ் சாலை பணிக்கான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.