Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘சைனஸ்’’ கவனம் ப்ளீஸ்

மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்கு பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ் - பீனாய்டு சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் வாழ்நாள் முழுக்க சைனஸ் பிரச்னையால் அவதி உண்டாகும்.நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்குத் திரவம் தேங்கும்போது சைனஸ் பிரச்னை (Sinusitis) ஏற்படுகிறது.

சைனஸ் பாதிப்பு ஏன்?

ஆரோக்கியக் குறைவு, சுற்றுச் சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்னைக்கு முக்கிய காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக் கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப் படுகிற மூக்குச்சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்னையைத் தூண்டுகின்றன.

அலர்ஜிதான் அடிப்படை!

மாசடைந்த காற்றில் கலந்துவரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள ‘சளி சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நீர் வடிதல் மற்றும் வலி உண்டாகும். அதிலும் சைனஸ் அலர்ஜிகள் பல உள்ளன. சிலருக்கு ஏசியால் அலர்ஜி உண்டாகும். சிலருக்கு பொது இடங்களில் குறிப்பாக பெருந்து, ரயில் களில் உள்ள ஏசி மட்டும் அலர்ஜி உண்டாக்கும். சிலருக்கு சிலவகை பழங்களால் மட்டும் அலர்ஜி ஏற்படும். ஒரு சிலருக்கு சாம்பிராணி, ஊதுபத்தி புகை, துவங்கி மற்றவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே, ஏன் தரை துடைக்கும் நறுமண க்ளீனர்கள் கூட சைனஸ் உண்டாக்கும். இதற்கு ஒரே வழி தகுந்த மருத்துவரை அணுகி அலர்ஜி பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள், எடுத்துக்கொண்டு தேவையான சிகிச்சை பெறுவதுதான் நல்லது. போலவே வெளியில் சென்று வந்தாலே கோடைகாலத்தில் குளியல், மற்ற நாட்களில் குறைந்தபட்சம் கை, கால், முகம் கழுவும் பழக்கம் வேண்டும்.

குழந்தைகளுக்கு அவ்வப்போது எலும்பு சூப், கால்சியம் நிறைய உணவுகள், மிளகு, சீரகம், சுக்கு, அதிமருந்தம், இஞ்சி போன்றவற்றை ஏதேனும் ஒரு வகையில் உட்கொள்ளக் கொடுப்பதும் அவசியம். கர்ப்பமான காலம் தொட்டே சில குளிர்ச்சியான உணவுகள், தலைக்குக் குளித்து அப்படியே ஈரத் தலையுடன் இருப்பது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தாய் ஈரத்தலையுடன் தாய்ப்பால் கொடுத்தால் கூட ஒரு சில குழந்தைகளுக்கு சளி பிடிக்கும். ஏனேனில் எதை வேண்டுமானாலும் மனித உடல் தாங்கிக் கொள்ளும் ஆனால் இந்த சளி, இருமல் மட்டும் வந்தால் மனதளவிலேயே அழுத்தம் உண்டாகும். சுவாசிக்க சிரமம் உண்டாகும் போது சாப்பிடுவதில் சரியாக மென்று சாப்பிடாமல், அப்படியே விழுங்குவதால் செரிமான பிரச்னை உண்டாகி உடல் எடை அதிகரிப்பில் கூட சுவாசப் பிரச்னையும் ஒரு காரணம். குழந்தைகளுக்கு மூக்கில் மூச்சு விடுவதை பழக்குங்கள். ஏனெனில் சின்ன சளிப் பிரச்னைதான் எதிர்காலத்தில் பெரிய குரட்டைப் பிரச்னையாகவும் தலைதூக்கும்.

- எஸ். ரமணி