புதுடெல்லி: பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு நடை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் வௌிநாடுகளுக்கும் சுற்று பயணம் சென்று வருகிறார். ராகுல் காந்தி இந்த பயணங்களின்போது பாதுகாப்பு விதிகளை மீறுவதாக மத்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய பாதுகாப்பு படை எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு(55) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பின் ஒருபகுதியாக ராகுல் காந்தி பார்வையிட வேண்டிய இடங்களை இந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் ஆயுதமேந்திய போலீஸ் முன்கூட்டியே உளவு பார்க்கிறது. ஆனால் ராகுல் காந்தி தன் உள்நாட்டு பயணங்களின் போதும், வௌிநாட்டு பயணங்களின் போதும் பலமுறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உள்ளார். இது அவருடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ள சிஆர்பிஎப் வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement