Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா அமைக்க அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களை செய்யும் கும்பல்களின் மோசடி சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையை பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்க பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.

ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர். சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் 2 கேமராவும், ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும். ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.