Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்குருவின் வார்த்தைகள் என் வாழ்வில் உண்மையானது: ஈஷா கிராமோத்சவத்தில் ஆயிஷாவின் அனுபவம்

கோவை: ஒரு பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள், எனக்குள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் பெண்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்ட பிறகு, இது உலகையே மாற்றும் வல்லமை உடையது என்பதை உணர்ந்தேன் என ஈஷா கிராமோத்சவ அனுபவத்தை ஆயிஷா பகிர்ந்துள்ளர்.

ஈஷா கிராமோத்சவம் தன்னுடைய வாழ்விலும், கிராமத்திலும் உருவாக்கிய மாற்றங்கள் குறித்து நெல்லூர் மாவட்டம், கோட்டால் கிராமத்தை சேர்ந்த ஆயிஷா நம்மிடம் கூறுகையில், “ஈஷாவில் இருந்து விளையாட வாருங்கள் என்று அழைத்த போது, நான் மிகவும் தயங்கினேன், சின்ன வயதில் விளையாடியது பிறகு விளையாட்டு என்பதே என் வாழ்வில் இருந்தது கிடையாது.

ஆனால் இது கிராம மக்களுக்கான குறிப்பாக பெண்களுக்கானது எனக் கூறிய போது, என் வீட்டில் இருந்த அம்மா, பெரியம்மா, அண்ணி ஆகியோர் இணைந்து விளையாடத் துவங்கினோம். முதல் நாள் அந்த பந்து என் கைகளுக்கு வந்த உடனே விளையாட்டின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரம் சென்றது தெரியாமல் நாங்கள் விளையாடினோம்.

எங்களின் கிராமத்தில் இருந்து முதலில் என்னுடைய குடும்பத்தில் இருந்து மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதில் 13 வயது முதல் கிட்டத்தட்ட 60 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். என் அம்மாவுக்கு 50 வயது, பெரியம்மாவிற்கு 60 வயது, என் உறவுக்கார சிறுமிக்கு 18 வயது. நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடினோம். நாங்கள் போட்டிகளில் தோற்றாலும் இப்படி விளையாடியது எங்களுக்குள் பெரிய மகிழ்ச்சியை தந்தது.

என் பெரியம்மாவிற்கு ஒரு டிபன் கடை உள்ளது, அவரின் வாழ்க்கை முழுவதும் கடையில் வேலை செய்வது, பிறகு வீட்டில் வேலை செய்வது என்றே பார்த்து இருக்கிறேன். நாங்கள் விளையாடிய போது அவரின் முகத்தில் பெரிய புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்தேன்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே விளையாடும் போது பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனாலேயே வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.

நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து எங்கள் உறவினர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி விளையாடினோம். ஆனால் அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமை என்பது எல்லாம் கடந்து நாங்கள் அனைவரும் ஒரே அணியாக விளையாடினோம்.

தனிப்பட்ட வகையில் நான் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்தவுடன், அப்படி ஒரு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் மாறி உள்ளது.

ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள். அந்த பந்து என் கைகளுக்கு வருவதற்கு முன்பு அது எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது ஒரு விளையாட்டு எப்படி எனக்குள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, சமூக பிரிவினைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது, உடல் ரீதியாக நம்மை உறுதியாக வைக்க உதவுகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது, பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நிஜத்தில் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருகிறேன்.” எனக் கூறினார்.