Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு: மத்திய அமைச்சர் பேச்சு

கோவை: சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார். ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் “இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும். கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்” எனக் கூறினார்.

விழாவில் சத்குரு பேசுகையில், “நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம். இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.

உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்” எனக் கூறினார்.

சாய்னா நேவால் பேசுகையில், “இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி” எனக் கூறினார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், “சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்.” எனக் கூறினார்.

17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.