Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். பம்பையில் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.