சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு: விசாரணையை தீவிரப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் தேவசம் போர்டின் பெரும்பாலான உயரதிகாரிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த நீதிபதிகள் கூறியது:
எந்த நம்பகத்தன்மையும் இல்லாத உண்ணிகிருஷ்ணன் போத்தியை தேவசம் போர்டு அதிகாரிகள் எப்படி நம்பினார்கள் என புரியவில்லை. தேவசம் போர்டின் இந்த செயல்பாடுகள் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கும், தேவசம் போர்டின் சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானதாகும். தேவசம் போர்டின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தங்கம் பூசுவதற்காக கோயில் நிலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
* முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர்
தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத்தகடுகள் முதலில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 2019ம் வருடம் தேவசம் போர்டு கமிஷனராக இருந்த வாசுவிடம் கடந்த இரு தினங்களுக்கு முன் போலீசார் விசாரணை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமான இவர் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தேவசம் போர்டு தலைவராகவும் இருந்த இவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் தவிர 2019ம் ஆண்டில் தலைவராக இருந்த சிபிஎம் முன்னாள் எம்எல்ஏவான பத்மகுமார் மற்றும் அப்போதைய உறுப்பினர்கள் 2 பேரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
* அமைச்சர்கள் சிக்குவார்கள்
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வாசுவை உடனடியாக கைது செய்யவேண்டும். அவரை கைது செய்தால் தற்போதைய அமைச்சர் மற்றும் முக்கிய மார்க்சிஸ்ட் தலைவர்களும் சிக்குவார்கள். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
