Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இன்று முதல் மண்டல காலம் தொடங்குகிறது சபரிமலை கோயில் நடை திறப்பு: முதல் நாளிலேலேயே 45 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 45 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக சபரிமலையில் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட பரபரப்புக்கு இடையே இவ்வருட மண்டல காலம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். அதன் பின்னர் மேல்சாந்தி கோயிலுக்குள் இருந்து எடுத்து வந்த தீபத்தை 18ம்படி வழியாக கொண்டு சென்று நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் தீ மூட்டினார். மண்டல பூஜை முடிந்து நடை சாத்தும் வரை ஆழியில் இந்த தீ எரிந்து கொண்டிருக்கும். பின்னர் புதிய மேல்சாந்திகளை அருண்குமார் நம்பூதிரி கைபிடித்து 18ம்படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் புதிய மேல்சாந்திகளின் உடலில் புனித நீர் தெளித்து ஐயப்ப மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது.

கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கும். சபரிமலை கோயில் நடையை புதிய மேல்சாந்தியான பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயில் நடையை மனு நம்பூதிரியும் திறப்பார்கள். இன்று முதல் நெய்யபிஷேகமும் தொடங்கும். நேற்று முதல் நாளிலேயே 45 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

* உடனடி முன்பதிவு கவுண்டர்கள்

பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் செங்கணூர் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் கேரளாவில் சாலை விபத்துகளில் மரணமடையும் சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சமும், மாரடைப்பு உள்பட இயற்கை மரணத்திற்கு ரூ.3 லட்சமும் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

* பெண்களுக்கு தனிவரிசை

மண்டல காலம் தொடங்குவதை முன்னிட்டு சபரிமலையில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதில் தரிசனம் செய்வதற்காக 18ம் படிக்கு அருகே தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* பம்பையில் குளிக்கும் பக்தர்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் கடந்த சில மாதங்களாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. தேங்கி நிற்கும் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம் தான் இந்த அமீபா பரவுகிறது. குளிக்கும்போது மூக்கு வழியாக இந்த அமீபா மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே பம்பை நதியில் குளிக்கும் பக்தர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தண்ணீரில் மூழ்கி குளிக்க விரும்புபவர்கள் மூக்கை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பம்பை நதியில் அமீபா இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.