சபரிமலை கோயிலில் இருந்து அனுமதியின்றி தங்கத் தகடை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றதாக புகார்
திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலை கோயில் துவாரகர் சிலை தங்கத் தகட்டை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலின் முன்புறம் 2 துவாரகர் சிலைகள் உள்ளன. சபரிமலை கோயில் முழுவதும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டபோது இந்த துவாரகர் சிலைகளுக்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன.
சபரிமலையில் முக்கிய பணிகள் அனைத்திற்கும் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் அனுமதியின்றி துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்றத்திடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சென்னைக்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது.
இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: துவாரகர் சிலையில் உள்ள தங்கத் தகடுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என்று தந்திரி கூறினார். இதனால்தான் அதை சீரமைப்பதற்காக தந்திரியின் அனுமதியுடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கத் தகடை நன்கொடையாக வழங்கியவரின் பிரதிநிதியும் , தேவசம் போர்டு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.