சபரிமலையில் கொட்டும் மழையிலும் குவியும் பக்தர்கள்: இன்றைய உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் 5 ஆயிரமாக குறைப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் பலத்த மழையிலும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இன்றைய உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்ததால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை நேற்று (24ம் தேதி) வரை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதன் பலனாக பக்தர்கள் வருகை சற்று கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் நெரிசலும் குறைந்ததால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து உடனடி முன்பதிவு எண்ணிக்கையை ஒவ்வொரு நாளின் சூழ்நிலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பக்தர்களின் வருகைக்குஏற்ப உடனடி முன்பதிவு எண்ணிக்கையை நிர்ணயிக்க 3 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.
தற்போது இக்குழு தினமும் பக்தர்கள் வருவதற்கு ஏற்ப உடனடி முன்பதிவு எண்ணிக்கையை நிர்ணயித்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் கடந்த 9 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 7.25 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே சபரிமலையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இன்று (25ம் தேதி) மட்டும் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
* 450 கண்காணிப்பு கேமராக்கள்
சபரிமலையில் பாதுகாப்புக்காக கேரள போலீஸ் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் 450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர திருவனந்தபுரத்தில் உள்ள டிஜிபி அலுவலகம், திருவனந்தபுரம் சரக ஐஜி, டிஐஜி மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். சாலக்காயம் முதல் பாண்டித்தாவளம் வரையிலும், மரக்கூட்டம், வரிசை வளாகம், கோயில் வளாகம் உள்பட பக்தர்கள் செல்லும் பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* நேற்று 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்
நேற்று திங்கட்கிழமை என்ற போதிலும் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இரவு 7 மணிக்குள் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். இரவு நடை சாத்துவதற்குள் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர்.



