திருவனந்தபுரம்: இவ்வருட மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்னர் சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் முன்பதிவுக்கு பக்தர்களிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
இந்நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த மண்டலகாலம் முதல் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நிதி சேகரிப்பதற்காக தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணத்தை செலுத்தினால் போதும். இதற்காக ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் இதுவரை மண்டல காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் இன்சூரன்ஸ்
சாலை விபத்துகளில் மரணமடையும் சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த வருடம் அமல்படுத்தப்பட்டது. முதலில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் கேரளாவில் எந்தப் பகுதியில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
  
  
  
   
