திருவனந்தபுரம்: சபரிமலையில் மாளிகைப்புரத்தம்மன் கோயில் அருகே புதிதாக நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பிரதிஷ்டைக்காக கடந்த 11ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. பிரதிஷ்டைக்கு முன்னோடியாக நேற்று முன்தினம் சுத்திக்கிரியை பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் நேற்று காலை 11.02 மணியளவில் கன்னி முகூர்த்தத்தில் பிரதிஷ்டை சடங்குகள் தொடங்கின.
பின்னர் அஷ்டபந்தலேபனம், கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. பிரசன்ன பூஜை மற்றும் தீபாராதனையுடன் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை சடங்குகள் நிறைவடைந்தன. நவக்கிரக கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு சபரிமலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் திறக்கப்படும்.