திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் வழியில் மாரடைப்பால் மரணமடையும் பக்தர்களுக்கு ரூ. 3 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை வரும் வழியில் சாலை விபத்தில் பக்தர்கள் மரணமடைகின்றனர். இவ்வாறு உயிரிழக்கும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க கடந்த சில வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது.
முதலில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்படும் விபத்துகளில் மரணமடையும் பக்தர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கேரளா முழுவதும் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சபரிமலை செல்லும் வழியில் மாரடைப்பு அல்லது இயற்கையாக மரணமடைபவர்களுக்கு இதுவரை இன்சூரன்ஸ் கிடைக்காமல் இருந்தது. சபரிமலையில் வருடத்திற்கு சராசரியாக 50 பேருக்கு மேல் மாரடைப்பு அல்லது இயற்கையாக மரணமடைகின்றனர்.
கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 48 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதனால் இவ்வாறு மரணமடைபவர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து இயற்கை மரணத்திற்கும் இன்சூரன்ஸ் வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதன்படி இயற்கை மரணத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சமீபத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இந்த ஆண்டு முதல் சபரிமலையில் இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ. 3 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். திருவனந்தபுரத்தில் நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இதற்கான நிதி சேகரிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ. 5 வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.