சபரிமலையில் மாயமான 4 பவுன் எடையுள்ள தங்க பீடம் புகார் கூறிய நன்கொடையாளரின் உறவினர் வீட்டிலிருந்து மீட்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் மாயமானதாக கூறப்பட்ட 4 பவுன் எடையுள்ள துவாரபாலகர் சிலையின் தங்க பீடம் புகார் கூறிய நன்கொடையாளரின் உறவினர் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது . சபரிமலை ஐயப்பன் கோயிலில் முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகளில் பெங்களூரூவை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவர் தன்னுடைய செலவில் தங்கத் தகுடுகள் பதித்துக் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த தங்கத் தகடுகளில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இந்த நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இதேபோல் இந்த தங்கத் தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பணிகள் முடிந்த பின்னர் திரும்ப சபரிமலைக்கு கொண்டு வந்தபோது அதில் 4 கிலோ தகடுகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது.
இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன் துவாரபாலகர் சிலைக்கு தான் 4 பவுன் எடையில் பீடம் அமைத்துக் கொடுத்ததாகவும், அது தற்போது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்று உண்ணிகிருஷ்ணன் போத்தி கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி தேவசம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேவசம் போர்டின் பாதுகாப்பு அறைகளில் நடத்திய சோதனையில் அங்கு பீடம் இல்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உண்ணிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கும் பீடம் சிக்கவில்லை.
இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூட்டில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போத்தியின் உறவினர் வீட்டில் பீடம் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த உறவினர் வீட்டிலிருந்து பீடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றி கொண்டு சென்றனர். பீடம் மாயமானதாக புகார் கூறிய உண்ணிகிருஷ்ணன் போத்தியின் உறவினர் வீட்டிலிருந்தே பீடம் கண்டுபிடிக்கப்பட்டதில் மர்மம் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.