திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கத்தை திருடியது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை இந்த வழக்கில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார், முன்னாள் திருவாபரணம் ஆணையாளர் பைஜு மற்றும் முன்னாள் தேவசம் போர்டு தலைவரும், ஆணையாளருமான வாசு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு தான் சபரிமலை கோயில் கதவு மற்றும் நிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இவை அனைத்தும் செம்புத் தகடுகள் என்று உண்ணிகிருஷ்ணன் போத்திக்கு தேவசம் போர்டு சான்றிதழ் அளித்திருந்தது. இதனால் அப்போது தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமார் மற்றும் உறுப்பினர்களான சங்கரதாஸ், விஜயகுமார் ஆகியோர் மீதும் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பத்மகுமாரை நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர். பல மணிநேர விசாரணைக்குப் பின் அவரை போலீசார் கொல்லம் மாவட்ட விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பத்மகுமார் முன்னாள் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆவார். மார்க்சிஸ்ட் பத்தனம்திட்டா மாவட்ட கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், கட்சியில் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் .


