திருவனந்தபுரம்: கடந்த 2019ம் ஆண்டும், கடந்த மாதமும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 துவாரபாலகர் சிலைகள், கதவு, நிலை ஆகியவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று கூறி சென்னைக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு சென்று அவற்றிலிருந்து பெருமளவு தங்கத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக , தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இக்குழு தங்கத்தகடுகள் கொண்டு செல்லப்பட்ட ஐதராபாத் மற்றும் பழுது பார்க்கப்பட்ட சென்னை அம்பத்தூர் நிறுவனம் மற்றும் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உண்ணிகிருஷ்ணன் போத்தியை போலீசார் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து நேற்று மதியம் தொடங்கிய விசாரணை 8 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதில் இந்த மோசடியில் யார் யாருக்கு பங்கு உள்ளது என்பது குறித்த பல முக்கிய விவரங்கள் போலீசுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று உண்ணிகிருஷ்ணன் போத்தியை பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
* ஜனாதிபதி வருகையால் 22ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 22ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்கிறார். அன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரும் அவர் பின்னர் கார் மூலம் பம்பை சென்று அங்கிருந்து ஜீப் மூலம் சன்னிதானம் செல்கிறார். ஜீப்பில் அவருடன் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், அவரது மனைவி மற்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் ஆகியோர் செல்கின்றனர். நண்பகல் 12க்கும் 1 மணிக்கும் இடையே ஐயப்பனை தரிசனம் செய்யும் ஜனாதிபதி மதிய உணவுக்குப் பின்னர் சன்னிதானத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 3 மணியளவில் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டு பம்பை வழியாக நிலக்கல் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முந்தைய நாள் (21ம் தேதி) 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஜனாதிபதி தரிசனம் செய்யும் 22ம் தேதி பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.