Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் ஏடிஜிபி தலைமையில் விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான சம்பவம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1998ல் துவாரபாலகர் சிலைகளில் ஒன்றரை கிலோ தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டன என்றும், இதுதொடர்பாக அப்பணிகளை மேற்கொண்ட யூபி குரூப் நிறுவனம் ஆதாரங்களை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1998ல் துவாரபாலகர் சிலைகளில் ஒன்றரை கிலோ தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டது நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது அதில் அனைத்தும் செம்புத் தகடுகள் தான் உள்ளன என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ல் துவாரபாலகர் சிலைகள் பழுது பார்ப்பதற்காகவும், தங்கமுலாம் பூசுவதற்காகவும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அப்போது பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வந்தபோது அந்த சிலைகளில் 400 கிராம் தங்கம் மட்டுமே இருந்ததாக தேவசம் போர்டு கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் மீதமுள்ள 1.100 கிலோ தங்கம் எங்கே போனது என்பதில் மர்மம் நீடிக்கிறது. இது ஒருபுறம் இருக்க இப்போது அந்த 400 கிராம் தங்கம் கூட சிலைகளில் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் தங்கம் மாயமானது தொடர்பான விசாரணை நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது இந்தப் புகார் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் நேற்று கேரள சட்டசபையில் எதிரொலித்தது. நேற்று காலை கேள்வி நேரம் தொடங்கியதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் மற்றும் தலைவர் பிரசாந்த் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கடும் ரகளையில் ஈடுபட்டனர்.