சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் உடனடி முன்பதிவு முடிந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் நடை திறந்த கடந்த 16ம் தேதி மாலை முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். அடுத்த 2 நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
நேற்று முன்தினம் 80,615 பேர் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும்போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. நேற்று முதல் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தெரியாமல் ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் முன் குவிந்தனர். முன்பதிவு முடிந்து விட்டது என்று ஊழியர்கள் கூறிய போதிலும் பக்தர்கள் கவுண்டர்கள் முன் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். இதனால் சுமார் 12 மணிநேரம் வரிசையில் காத்திருந்த பிறகே அவர்களால் தரிசனம் செய்ய முடிந்தது.
* டிசம்பர் 13ம் தேதி வரை முன்பதிவு முடிந்தது
சபரிமலையில் நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே ஆன்லைன் முன்பதிவு டிசம்பர் 13ம் தேதி வரை முடிந்துவிட்டது. இதுவரை தரிசனத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* முன்பதிவு செய்த நாளில் வர வேண்டும்
சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏடிஜிபி ஸ்ரீஜித் கூறியது: வழக்கமாக மண்டல கால பூஜைக்கு நடை திறக்கும் நாளன்று பத்தர்கள் வருகை குறைவாகவே இருக்கும். கடந்த வருடம் 29 ஆயிரம் பேர் மட்டுமே வந்தனர். ஆனால் இந்த வருடம் முதல் நாளிலேயே 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். கடந்த வருடம் மண்டல, மகரவிளக்கு காலத்தில் 4 நாட்கள் மட்டுமே 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர்.
ஆனால் இந்த வருடம் முதல் வாரத்திலேயே அடுத்தடுத்து 2 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்தனர். ஏராளமான பக்தர்கள் வனப்பாதை வழியாக வந்து வரிசையில் ஊடுருவியது தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. உடனடி முன்பதிவு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது சபரிமலையில் நிலைமை சீராக உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் அதே நாளில் வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


