சபரிமலையில் முதல் 15 நாட்களுக்கான தரிசன முன்பதிவு முடிந்தது: 21.5 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் முன்பதிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். முதல் 15 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.
தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 20 ஆயிரம் பேருக்கும் தினமும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் மண்டல காலத்தில் வரும் 16ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது.
இந்த நாட்களில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே முடியும். நடை திறக்கப்படும் 16ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* தங்கும் அறைகளுக்கு 2 வாரங்களுக்கு முன் முன்பதிவு
சபரிமலை வரும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குவதற்கு www.onlinetdb.com என்ற இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்யலாம். தங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். எந்த தேதியில் அறை தேவையோ அன்றிலிருந்து 15 நாட்களுக்கு முன் இரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
