கேரளா: சபரிமலையில் நேற்று நண்பகலுடன் முடிந்த 43 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் பல்வேறு பிரச்சனைகள் பக்தர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மண்டல பூஜைகள் தொடங்குவதற்கு முன்பாகவே பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்வது வழக்கம். பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதி, மின்சாரம் போன்றவற்றையும், கழிப்பிட வசதிகளையும் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருப்பர்.
இந்த ஆண்டு மண்டல பூஜை தொடக்க நாளில் பக்தர்கள் செல்ல கூடிய இடங்களில் குடி தண்ணீர் வசதியோ, மின்வசதி, கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை பக்தர்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் 2 லட்சம் பக்தர்களுக்கு மேல் சாமி தரிசனம் செய்துள்ளனர். பல நேரங்களில் கூட்டம் அதிகரித்த காரணத்தினால் சன்னிதானம் பகுதிக்கு பக்தர்கள் வந்தால் பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து சரண்கொத்தி மற்றும் மரக்கூட்டம் பகுதிகளில் பக்தர்கள் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டு திறந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் 5 மணி நேரம் ஒரே இடத்தில் மலைப்பகுதிகளில் நிறுத்தி வைக்கக்கூடிய காரணத்தினால் நோய்வாய்ப்பட்ட பக்தர்கள் இன்னல்களை சந்தித்து, மயங்கி விழக்கூடிய நிலையும் ஏற்பட்டது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் பக்தர்கள் இடத்தில் எழுந்த புகார்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் தேவசம் போர்டு நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளது. பம்பைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக நிலக்கல் பகுதியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அதிக பக்தர்கள் வரும் பட்சத்தில் நிலக்கல்லில் இருந்து கூட்டமாக பக்தர்களை அனுப்பிவைத்து ஒழுங்குபடுத்தும் முடிவை எடுத்துள்ளனர். இன்று காலை முதல் கூட்ட நெரிசலோ அல்லது பிரச்சனைகளோ இல்லாமல் அதிகாலை முதல் சாமி தரிசனம் நடையப்பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பலரும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி செல்லக்கூடிய நிலையம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து வந்த 40 பக்தர்கள் தங்களுடைய இருமுடியை பம்பையில் ஒப்படைத்துவிட்டு சாமி தரிசனம் செய்யாமல் மனவிரக்தியோடு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஒழுங்கப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


