பொள்ளாச்சி: சபரிமலை சீசன் துவக்கத்தால் பொள்ளாச்சி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததுடன், விற்பனையும் மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை நாளின்போது, ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர்.இதில் கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி அந்நேரத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அந்நேரத்தில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமானது.
அதன்பிறகும், கடந்த இரு வாரமாக வெளியூர்களில் இருந்தும் ஆடுகள் வரத்தும் அதிகமாக இருந்தது. சுமார் 800 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.மேலும் அந்நேரத்தில், ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால் நேற்று கூடிய சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 300க்கும் குறைவான மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இருப்பினும் தற்போது சபரிமலை சீசன் துவக்கம் என்பதால், ஆடு விற்பனை மந்தமானது. கடந்த வாரத்தை விட ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலும் ஒவ்வொரு ஆடும் குறைவான விலைக்கு விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


