திருவனந்தபுரம்: சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளன. ஆன்லைன் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த நவ.1ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கின. மாதாந்திர வழிபாட்டுக்கு வனப் பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனை ஒட்டி சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, ரசாயன குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 'எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைக்கப்பட வேண்டும். வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் குங்குமம் பயன்பாட்டால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

