கேரள: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 2019ல் அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது.
அப்போது துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில், எஸ்ஐடி, எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றபட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.
அதைத்தொடா்ந்து சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, சபரிமலை தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் என்பவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் 5-வது நபராக தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


