வுஹான்: வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் வுஹான் நகரில் வுஹான் ஒபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), ஸ்லோவக் வீராங்கனை ரெபேகா ஸ்ரம்கோவா (28) உடன் மோதினார். முதல் செட்டில் துள்ளலாய் ஆடிய ரெபேகா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.
அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய சபலென்கா பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து அடுத்த இரு செட்களையும் 6-3, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் (22), குரோஷியா வீராங்கனை ஆன்டோனியா ரூஸிக் (22) மோதினர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்திய கிளாரா, அடுத்த செட்டை ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் அட்டகாச வெற்றி பெற்றார். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.