Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எஸ்.பி.வேலுமணிக்கு இதே வேலையா போச்சு... முதல் நாள் முதல்வர் திறந்தாருனா... மறுநாள் இவர் கொண்டாடுவாரு... கோவையில் மேம்பாலம் ஓபன் பண்ணா கொடிய தூக்கிட்டு கிளம்பிடுறாரு... பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை: கோவையின் புதிய அடையாளமான ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் திறந்து வைத்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று அதிமுகவினர் போட்டி போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் 5 சதவீதம் கூட பணி செய்யாதவர்கள் சொந்தம் கொண்டாடுவதை, பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கோவை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டி நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையின் புதிய அடையாளமாக விளங்கி வரும் இந்த பாலமானது வாகன ஓட்டிகளிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கோவை மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மக்கள் புதியதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சென்று செல்பி எடுத்து தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாக வைத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேம்பாலத்தில் காரில் பயணித்தபடி பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகே குவிந்தனர். பின்னர் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளை பாலத்தில் வைத்து வெடிக்க முயன்றனர். ஆனால் போலீசார் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என கூறி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதிமுக கொடியுடன் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

திடீரென்று பாலத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் குவிந்ததால் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அதிமுகவினர் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த பாலத்துக்கு அதிமுக ஆட்சியில் 5 சதவீத பணி கூட நடக்கவில்லை. ஆனால் 55 சதவீதம் பணி செய்ததாக எடப்பாடி பழனிசாமி புருடா விட்டார். திமுக ஆட்சி காலத்தில் திறக்கும் மேம்பாலத்திற்கு சொந்தம் கொண்டாடுவதையே அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்துள்ளனர்.

முன்னதாக, கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்த மறுநாளே, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பாலம் பகுதியில் திரண்டு கோஷமிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர். இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறந்தபோது, எஸ்.பி.வேலுமணி ஆதரவாளரான எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் பாலத்தில் ஏறி இனிப்பு வழங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு பாலம் திறக்கும் போதும், அதிமுகவினர் அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும், இதனால் பாதிக்கப்படுவது நாங்கள் தான் என்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.