ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை: ரிலையன்ஸ், நயாராவுக்கு பெரும் அடி
புதுடெல்லி: உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன் மூலம் எந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனமும் தடை செய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை கொண்டிருக்க முடியாது. இதை மீறுபவர்கள் சிவில் மற்றும் கிரிமினல் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினை வழிக்குகொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்த ஒருநாளைக்கு 31 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் இது 6 சதவீதம். ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை ரோஸ்நெப்ட் கொண்டுள்ளது. இந்நிறுவனங்களிடம் இருந்து இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த ஒரு நேரடி ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே வாங்கி வருகின்றன.
இதனால் அமெரிக்காவின் தடையால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அவை வழக்கமான கொள்முதல்களைத் தொடரலாம் என தொழில்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். அதே சமயம், அமெரிக்காவின் தடையால் ரிலையன்ஸ், நயாரா நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளன. குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை வைத்திருக்கும் ரிலையன்ஸ், ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு ஒருநாளைக்கு அனுப்பப்படும் 18 லட்சம் பீப்பாய் தள்ளுபடி விலை எண்ணெயில் பாதியை வாங்குகிறது.
இதை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்கிறது. இதில் பெரும் பங்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு அனுப்பி அதிக லாபம் பெற்று வருகிறது. 2022ல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 35 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) மதிப்புள்ள ரஷ்ய எண்ணெயை ரிலையன்ஸ் வாங்கி லாபம் சம்பாதித்துள்ளது. இதே போல நயாரா நிறுவனத்தில் ரோஸ்நெப்ட் 49.13 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த நயாரா முழுக்க முழுக்க ரஷ்ய எண்ணெயை மட்டுமே நம்பி உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் நேரடி ஒப்பந்தம் செய்திருப்பதால் அமெரிக்காவின் தடையால் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளன. தடையை மீறி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் விரும்பவில்லை என அந்நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் 21ம் தேதிக்குள் தடை செய்யப்பட்ட இரு நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும் என்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் தனது கொள்முதலை பெருமளவு குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நயாரா நிறுவனம் கடந்த ஜூலையில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.
* டிரம்பின் திட்டம் இதுதான்
கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ரஷ்யா தனது பொருளாதாரத்தை பாதுகாத்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்கி வருகின்றன. தற்போது இந்த தடை மூலம் ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் முழுமையாக நின்று விடாது என்றாலும், அதற்கான பணம் செலுத்துதல், போக்குவரத்துக்கு மாற்று வழிகளை ஆராய வேண்டும். இது குறுகிய கால விநியோக பாதிப்பை ஏற்படுத்துவதோடு ரஷ்யாவின் லாபத்தை பெருமளவில் குறைக்கக் கூடும்.
ஐரோப்பிய நாடுகளின் தடையால் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் கொள்முதல் முற்றிலும் குறைக்கப்படும். இதன் மூலம் போர் நிறுத்தம் தொடர்பாக வர்த்தகத்தை வைத்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேரம் பேச முடியும் என்பதே அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டம். எனவே அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வெகுவாக குறையும் என்பதால் அதற்குள் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
