கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா, ஈரான் நாடுகள் உதவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(11ம் தேதி) ரஷ்யாவின் 10க்கும் மேற்பட்ட டிரோன்கள் போலந்து வான்வௌிக்குள் அத்துமீறி நுழைந்தது. இந்த டிரோன்களை போலந்து வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து ருமேனியா நாட்டுக்குள்ளும் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் போலந்து தங்கள் நாட்டு டிரோன் போர் திறன்களை வலுப்படுத்துவதற்காக உக்ரைனின் உதவியை நாடி உள்ளது. போலந்து பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விளாடிஸ்லாவ் கோசினியாக் காமிஸ் வௌியிட்டுள்ள பதிவில், “போலந்து உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இதில் டிரோன்களை இயக்குவதில் திறன்களை பெறுவதும் அடங்கும்” என தெரிவித்துள்ளார்.