கடந்த அக்டோபரில் ரூ.25,500 கோடி ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது குறையவில்லை: இந்தியா தொடர்ந்து 2வது இடம்
புதுடெல்லி: உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் வளங்களை கட்டுப்படுத்தும் விதமாக, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட், லூகாயில் ஆகிய 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. வரும் 21ம் தேதிக்குள் இவ்விரு நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்த வேண்டும். கடந்த மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிட்டதும் இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ், எச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி, மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆகியவை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி உள்ளன.
இதனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா ரூ.25,500 கோடி செலவிட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன் மூலம் தற்போது வரையிலும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கவில்லை என தெரிகிறது.
கடந்த செப்டம்பரிலும் இதே அளவு தொகைக்கு இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையிலும், ரஷ்யாவிடம் அதிகளவு எரிபொருட்களை வாங்கும் உலக நாடுகளில் தொடர்ந்து 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் சீனா நீடிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து மொத்தம் ரூ.32,000 கோடிக்கு எரிபொருட்களை வாங்கிய இந்தியா, ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய், (81 சதவீதம்), ரூ.3,580 கோடிக்கு நிலக்கரி (11 சதவீதம்), ரூ.2,200 கோடிக்கு எண்ணெய் பொருட்களை (7 சதவீதம்) வாங்கி இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


