வாஷிங்டன்: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்த ஒன்றிய அரசு ரஷ்ய உடனான வர்த்தகத்தை குறைத்து அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய டிரம்ப் தடை விதித்தார். இந்த தடையை மீறும் நாடுகள் அபராதம் மற்றும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கெடு விதித்தது.
அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை குறைத்த ஒன்றிய பாஜக அரசு கடந்த மாதம் முதல் அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா வழங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 17% சதவிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவிடம் இருந்து நாளொன்றுக்கு 5,93,000 பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மதத்திற்குப் பிறகு, கடந்த அக்டோபரில் அமெரிக்காவில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
