ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய போரை 4 வருடமாக தொடர்கிறார்: ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை புதின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் வெல்லக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது என ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியிலும் டிரம்ப் கூறியதாவது;
புதினுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போர் அவருக்கு மிகவும் மோசமாக இருந்தது. அவர் 4 வருடங்களாக ஒரு போரில் ஈடுபட்டுள்ளார். அதை ஒரு வாரத்தில் அவர் வென்றிருக்க வேண்டும். இந்தப் போரினால் புதின் சுமார் 15 லட்சம் வீரர்களை இழந்து இருக்கலாம் அல்லது அதற்கு நிகரான எண்ணிக்கையில் இருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இறப்பாக இருக்கலாம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு போர் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றார்.