ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டு உக்ரைனுக்கு அழுத்தம் தர வாய்ப்புள்ளதால் டிரம்புக்கு எதிராக திரண்ட ஐரோப்பிய தலைவர்கள்: வெள்ளை மாளிகையில் இன்று முக்கிய ஆலோசனை
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் டிரம்ப் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாஷிங்டனில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். ஆனால், இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தை, உக்ரைனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் எந்தவொரு தீர்வையும் எட்டாமல் தோல்வியில் முடிந்தது. இருப்பினும், உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்த செய்தியை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றாலும், ரஷ்யாவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ரஷ்ய அதிபரின் கருத்துக்களை விட அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ரஷ்ய அதிபர் எந்த உத்தரவாதத்தையும் வழங்க மாட்டார். இருந்தாலும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான அமெரிக்காவின் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று தெரிவித்தார். இந்த பின்னணியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (ஆக. 18) வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமே, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்வதுதான். இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனி பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசுகின்றனர். மேலும், ‘நேட்டோ’ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர். கடந்த காலங்களில் ஜெலன்ஸ்கிக்கு ஏற்பட்ட அவமானத்தை மீண்டும் அவர் சந்திக்க கூடாது என்பதற்காகவும், ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தப் போரில் டிரம்பின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே ஐரோப்பிய தலைவர்கள் வாஷிங்டனில் முகாமிட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்கள் உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதினின் ஒருதலைப்பட்ச திட்டத்தை அதிபர் டிரம்ப் ஆதரிக்கக்கூடும் என்ற சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவால் இதுவரை கைப்பற்ற முடியாத பகுதிகளை, உக்ரைன் நிரந்தரமாக விட்டுக்கொடுப்பதும் டிரம்பின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை போர் நிறுத்தம் செல்லாது என்பதும் புதினின் திட்டமாகும். இந்நிலையில், உக்ரைனின் ஒருமைப்பாட்டிற்கான தங்கள் ஆதரவை ஐரோப்பிய தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒருவேளை ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கத் தயாராக உள்ளது என்பது குறித்தும் அவர்கள் தெளிவு கோருவார்கள். உக்ரைனின் புதிய பகுதிகளை ரஷ்யா பெற்றால், எதிர்கால தாக்குதலுக்கு அதை ஏவுதளமாகப் பயன்படுத்தும் என்றும் ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. எனவே இன்றைய தலைவர்களின் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது டிரம்ப் கொடுக்கும் அழுத்தம் அம்பலமாகுமா? என்பது தெரிந்துவிடும்.